சுக்கிரன் மூல மந்திரம் :
ஓம் ஐம் ஜம் கம் க்ர ஹேச்வராய சுக்ராய நம
இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் 108 முறை துதித்து வருவது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் லட்சுமி படத்திற்கு வெள்ளை நிற தாமரை மலர் சமர்ப்பித்து, கற்கள் நைவேத்தியம் வைத்து, இம்மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை துதித்து வருபவர்களுக்கு சுக்கிர கிரக தோஷங்கள் நீங்கும். நல்ல வருமானமும், தொழில் மற்றும் வியாபாரங்களில் மிகுந்த லாபமும் உண்டாகும். திருமணமாகாதவர்கள் மனதிற்கினிய வாழ்க்கைத் துணை கிடைக்கப் பெறுவார்கள். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்க கூடிய யோகம் விரைவில் ஏற்படும். குடும்பத்தில் நீடித்து வந்த பொருளாதார கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.
சுக்கிரன் வழிபாடு
இறந்தவர்களை உயிர்ப்பிக்கக்கூடிய சஞ்சீவினி மந்திரம் அறிந்தவர் “சுக்கிராச்சாரியார்” எனப்படும் சுக்கிர பகவான். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் நல்ல நிலையில் அமையப் பெற்றவர்கள் அனைத்து விதமான சுகபோகங்களை அனுபவித்து, இன்பமான வாழ்க்கையை வாழ்வார்கள். தன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்தையும் வழங்கும் குணம் கொண்டவர் சுக்கிரபகவான். சுக்கிரனை வழிபடுவதற்கு அனைத்து தினமே சிறப்பானவை என்றாலும் வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு வாசமுள்ள மலர்களை சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சுக்கிர மூல மந்திரம் துதித்து வழிபடுவதால் வாழ்வில் வேண்டிய வசதிகளை செல்வங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.
சுக்கிரன் பரிகாரங்கள்:
சுக்கிர பகவானின் முழுமையான அருளைப் பெறுவதற்கு தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சுக்கிரபகவான் தலமான கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலுக்கு ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் காலை 6 முதல் 7 மணிக்குள்ளாக சென்று, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் சுக்கிர பகவான் சன்னிதியில் சுக்கிர பகவானுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து, இளம்பச்சை அல்லது வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சுக்கிரனின் முழுமையான அருளைப் பெற்றுத் தரும்.
மேற்சொன்ன பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் நவக்கிரக சந்நிதியில் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 லிருந்து 7 மணிக்குள்ளாக சென்று சுக்கிர பகவானுக்கு மல்லிகை பூக்கள் சமர்ப்பித்து, பச்சை நிற இனிப்புகள் அல்லது கற்கண்டுகள் நைவேத்தியம் வைத்து, நெய் தீபம் ஏற்றி சுக்கிர காயத்ரி மந்திரத்தை 108 முறை வரை துதித்து வழிபட்டு வருவதால், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சுக்கிர கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளங்கள் பெருகும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரம் முதல் அதிகபட்சம் 27 வாரம் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனைப் பெற முடியும்.
இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர
பகவானுக்கு விரதம் இருந்து, சுக்கிரனையும் மகாலட்சுமியையும் வழிபடுவது
ஆற்றல் வாய்ந்த பரிகாரமாக இருக்கிறது. ஏழை பெண்களின் திருமணத்திற்கு புடவை
தானம், மாங்கல்ய தானம் போன்றவற்றை தருவது சுக்கிர பகவானின் அருட்கடாட்சத்தை
உங்களுக்குப் பெற்றுத் தரும். உங்களால் முடிந்த போது இளம் பச்சை நிறம்
மற்றும் வெள்ளை நிற ஆடைகளை வசதி குறைந்தவர்களுக்கு தானம் வழங்குவது
சிறந்தது. வலது கை மோதிர விரலில் வைரக்கல் பதிக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை
அணிந்து கொள்வது உங்களுக்கு சுக்கிரனால் யோகங்கள் உண்டாகச் செய்யும்.