சென்னை: ருணம், ரோகம் சத்ரு இந்த மூன்றும் இல்லாதவன் நிம்மதியான
மனிதன். ஆனால் ஒரு சிலருக்கு கடன் இருந்தால்தான் தூக்கமே வரும். அதே போல
சொந்த வீடு ஆசையும் சிலருக்கு நிறைவே நிறைவேறாது. வாடகை வீட்டிலேயே
வாழ்க்கையை கழிப்பார்கள். சொந்த வீடு வாங்கவும், அப்படியே வாங்கினாலும்
அதில் வசிக்கவும் யோகம் வேண்டும். கடன் தொல்லை நீக்கி சொந்த வீட்டில்
வசிக்கும் யோகம் தருபவர் செவ்வாய் பகவான். செவ்வாய் விரதம் இருந்து சில
பரிகாரங்களை செய்தால் சொந்த வீடு யோகம் கிடைக்கும் கடன் தொந்தரவுகள்
நீங்கும். ஆடி செவ்வாய்கிழமையன்று இந்த பரிகாரத்தை ஆரம்பிங்களேன்.
செவ்வாய்கிழமை மங்களகரமான நாள். பூமிக்கு அதிபதியான செவ்வாய் பகவான்
ஆட்சி செய்யும் நாள். செவ்வாய் பகவான் ஒருவர் ஜாதகத்தில் வலிமையாக
இருந்தால் அவர் வீடு, நிலம் சொத்துக்கள் வாங்கி சொந்த வீட்டில் வசிப்பார்.
அதே நேரம் செவ்வாய் உங்க ஜாதகத்தில் பலவீனமாக ஆக இருந்தால் சொந்த வீடு
சிலருக்கு அமையவே அமையாது. அதே போல கடன் பிரச்சினை காலை சுற்றிய பாம்பாக
இருந்து கவலையை ஏற்படுத்தும்.
கடன் தொல்லை நீங்கவும், சொந்த வீடு வாங்கவும் சில பரிகாரங்கள்
இருக்கின்றன. அந்த பரிகாரங்களை செய்தால் கடன் பிரச்சினைகள் தீரும் கூடவே
சொந்த வீடு யோகமும் அமையும்.
குலதெய்வ பரிகாரம்
முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக, இந்தப் பிறவியில் பல
தொல்லைகளை அனுபவிக்கிறோம். கடன் பிரச்சினையும் அப்படித்தான். கடன்
பிரச்சினை மூன்று பவுர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று
குலதெய்வத்தை மனமுருக வேண்டி, முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள்
அனைத்தும் விலகும். மூன்று பவுர்ணமிகள் குல தெய்வ கோவிலுக்கு போக
முடியாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வம் படத்திற்கு முன்பாக இந்த பரிகாரத்தை
செய்யலாம்.
குல தெய்வத்திற்கு படையல்
வீட்டில் குல தெய்வ படம் இருப்பவர்கள் ஐந்துமுக விளக்கில் நெய் விட்டு
தீபம் ஏற்ற வேண்டும். குலதெய்வத்திற்கு படையல் இட்டு கடன் பிரச்சினைகள்
முழுவதுமாக நீங்க வேண்டும் என்று மனமுருகி குலதெய்வத்திடம் பிரார்த்தனை
செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது பவுர்ணமிகள் குலதெய்வத்திற்கு
படையலிட்டு வழிபட்டு வந்தால், கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
வெள்ளிக்கிழமை பரிகாரம்
கடன் பிரச்சினை தீர வெள்ளிக்கிழமையன்று காலை குளித்து பூஜைகள் செய்து,
அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மகாலட்சுமியை வேண்டி கொண்டு கல் உப்பு
வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர
வீட்டில் மகாலட்சுமி வரவிற்கு குறைவே இருக்காது. வெள்ளிக்கிழமை காலை 5
வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை பூஜையில் வைத்து
லட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து
வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் ஏற்கனவே செய்ததை ஒரு உண்டியலில்
போட்டு வைக்கவும்.
செவ்வாய் பகவான் அருள்
நவக்கிரகங்களில் முக்கியமான கிரகம் செவ்வாய். இது ராஜகிரகம். சூரியனின்
தளபதி. ஒரு மனிதனுக்கு ரத்தம், தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள்
எதிர்ப்பு சக்தி, செவ்வாய் தோஷம்,சொந்த வீடு, இது எல்லாத்துக்கும்
மூலகாரணமாக விளங்குபவர் செவ்வாய் பகவான்.ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை
செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருக பகவானை வணங்கி செவ்வாய்க்கிழமைகளில்
விரதம் இருக்க வேண்டும்.
வீடுகட்டும் யோகம்
11 செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் அந்த முருகன்
அருளினாலும் செவ்வாய் பகவான் அருளினாலும் வீடு கட்டும் யோகம் அமையும். அதே
போல செவ்வாய்கிழமை வெற்றிலையில் மாலை கட்டி விநாயகருக்கு மாலை சாற்றி
வணங்கினால் கடன் பிரச்சினை தீரும்.
செவ்வாய்கிழமை விரதம்
செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த
நேரத்தில் எழுந்து குளித்து வீட்டில் விளக்கேற்றி விட்டு ஒரு ரூபாய்,
இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்து கழுவி விட்டு அதில் சந்தனம் கும்குமம்
வைத்து முருகன் படத்திற்கு அருகில் வைக்க வேண்டும். பக்கத்தில் இருக்கிற
முருகன் கோவிலுக்கு போய் வழிபட வேண்டும். வீட்டுக்கு வந்தவுடனே பால் அல்லது
பழ ஜூஸ் மட்டும் சாப்பிட்டு விரதத்தைத் தொடர வேண்டும்.
செவ்வாய் பகவான் உண்டியல்
முருகனுக்கு உகந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அப்புறம் மந்திரங்கள்
ஆகியவற்றை படிக்கவோ கேட்கவோ செய்ய வேண்டும். மாலையில் முருகன் கோவிலுக்க
போய் வந்து விட்டு விரதம் முடிக்க வேண்டும். 11 செவ்வாய்கிழமை இதுபோன்ற
விரதம் முருகனுக்கு இருந்தால் கண்டிப்பாக முருகன் அருளினால் சொந்த வீடு
யோகம் அமையும். 11 வாரமும் சேர்த்து வைத்த நாணயங்களை பழனி முருகன் கோவில்
உண்டியலிலோ, வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு எதிரில் உள்ள
உண்டியலிலோ கொண்டு போய் போட்டு விட்டு வணங்கி வரலாம். வீடு கட்டும் யோகம்
கை மேல் தேடி வரும்.