சொந்த வீடு வாங்க வைக்கும் அபிராமி அந்தாதி பாடல்.


சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? பலரின் கனவாகவே இருப்பது வீடு தான். சாவதற்குள் எப்படியேனும் ஒரு வீட்டை கட்டி விட மாட்டோமா? என்ற ஏக்கம் பலரின் மனதிலும் நீங்காமல் இருக்கும். அனைத்து பிரச்சனைக்கும் கடவுளிடம் ஒரு வழி நிச்சயம் இருக்கும். அப்படி சொந்த வீடு யோகம் வாய்க்க அபிராமி அந்தாதி பாடல் தினமும் உச்சரித்து வாருங்கள். இந்த அற்புதமான பாடல் பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

வீடு கட்டுவதற்கும் நல்ல காலம் வரவேண்டும். நினைத்தவுடன் நினைத்த மாத்திரத்தில் சுலபமாக வீடு கட்டிவிட முடியாது. எதற்கும் ஒரு யோகம் வேண்டும் என்று கூறுவார்களே அது போல தான். இதனால் தான் என்னவோ, ‘வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப்பார்’ என்று பழமொழியை கூறிவைத்துச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நீங்கள் வீடு கட்டுவதில் இருக்கும் தடைகள் நீங்க இந்த பாடலை தினமும் உச்சரிக்கலாம். எப்படி உச்சரிக்க வேண்டும்? எப்போது உச்சரிக்க வேண்டும்? என்பதைப் பற்றி இனி பார்க்கலாம்.

அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பயன்களைத் தரவல்லது. மிகுந்த சக்தி வாய்ந்த இந்த பாடலை தினமும் உச்சரிப்பதன் மூலம் உங்கள் பிரச்சனைகள் நீங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நூறு பாடல்களையும் உச்சரிக்க முடியாதவர்களுக்கு 101 ஆவது பாடலாக நூற்பயன் பாடல் அமைந்திருக்கிறது. இந்த ஒரு பாடலை பாடினாலே இந்நூலை முழுவதுமாக படித்து பயன் கிட்டுமாம். எந்த பாடலையும் பாடும் முன் நூற்பயன் பாடலை பாடி முடித்த பின்னர் பாடுவது பல மடங்கு பலன் தரும்.

101. அபிராமி அந்தாதி நூற்பயன்: 

ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம் 

பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக் 

காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை 

சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

அபிராமி அந்தாதி பாடல் பாடும் முறை: அபிராமி அந்தாதி பாடலை அவரவர்களின் காரிய சித்திகாக வேண்டிக் கொண்டு பாடப்படுகிறது. தங்களின் பாடலைப் பாடும் முன் அபிராமி அந்தாதியின் 101 வது பாடலான நூற்பயன் பாடலை 3 முறை உச்சரிக்க வேண்டும் என்பது தான் முறை. இப்பாடலை அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் அல்லது மாலை வேளையில் நாலரை மணியிலிருந்து ஆறரை மணிக்குள்ளாக பாடி முடித்து விடவேண்டும். மிகுந்த மந்திர சக்தி வாய்ந்த இப்பாடலை இவ்வேளைகளில் அபிராமி தேவியை மனதார நினைத்துக் கொண்டு தினமும் உச்சரிப்பதன் மூலம் கூடிய விரைவில் காரிய வெற்றி பெறுவீர்கள். சொந்த வீடு அமைய, நிலம் வாங்க, செல்வம் பெருக கீழ்வரும் இரண்டு பாடல்களை தினமும் பாடி பயன் பெறலாம்.

அபிராமி அந்தாதி பாடல் எண் 20: 

வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக:- 

உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ? 

அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? 

அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ? 

மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

அபிராமி அந்தாதி பாடல் எண் 68: 

நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக:- 

பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும், 

ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச் 

சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே 

சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே.

வீடு கட்டுவதில் இருக்கும் தடைகளும், தோஷங்களும் இப்பாடலைப் பாடுவதன் மூலம் நீங்கும். நிலம் வாங்க திட்டமிட்டவர்கள் நினைத்தபடி நிலம் வாங்க முடியும். எத்தகைய தடைகள் இருந்தாலும் அபிராமி அந்தாதி பாடல் மூலம் நீக்கிவிட முடியும். உண்மையான பக்தி சிரத்தையுடன், முழு நம்பிக்கையுடன் அபிராமி அந்தாதி பாடலைப் பாடி அனைவரும் பயன் பெறுங்கள்.

Previous Next

نموذج الاتصال