தாத்தாவின் சொத்து மகனுக்கா? பேரனுக்கா? யார் உரிமை கோர முடியும்?


ஒருவேளை உயில் எதுவும் எழுதாமல் இறந்துவிட்டால், அப்போதுதான் அவரது உடனடி சட்ட வாரிசுகளான மனைவி, மகள், மகன் ஆகியோர் அவரது சுய சம்பாத்திய சொத்துகளுக்கு உரிமை கோர முடியும்.

குடும்பத்து உறுப்பினர்களிடையே சொத்துக்கள் பிரிப்பது தொடர்பாக இந்தியாவில் தெளிவான சட்டங்கள் உள்ளன. எனினும் இதுகுறித்த எந்தவித புரிதலும் இல்லாமல் தான் பலரும் இருக்கிறார்கள். இதனாலேயே நம் நாட்டில் பல சொத்துப் பிரச்சனைகள் நீதிமன்றங்களில் பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. இப்படியான நீதிமன்ற வழக்குகளை தவிர்க்கவும், சொத்துக்களை சரியாகவும் விரைவாகவும் பிரிக்க வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் இதுகுறித்த சட்டங்களை விளக்கமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

தாத்தாவின் சொத்து யாருக்கு, எவ்வுளவு, எப்போது கிடைக்கும் எனப் பலரும் தெரியாமல் இருக்கிறார்கள். தாத்தாவின் சொத்தில் பேரன்/பேத்திகளுக்கு உரிமை உள்ளதா, இல்லையா என்பதைப் பற்றிதான் இன்று பார்க்கப் போகிறோம்.

ஒரு நபர் இறப்பதற்கு முன்பு தனது சொத்து குறித்து உயில் எதுவும் எழுதாத நிலையில்தான் இதுபோன்ற கேள்விகள் எழும். இந்திய சட்டப்படி, தாத்தாவின் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தில் பேரனுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. மூதாதையர்கள் சொத்தில் பேரனுக்கு உரிமை உள்ளது என்பது சரிதான்; பேரன் பிறக்கும் போதே, தனது தாத்தா அவருடைய மூதாதையர்களிடம் இருந்து பெற்ற சொத்துக்கள் அனைத்தும் அவனுக்கு உரிமையாகின்றன. ஆனால் தாத்தா இறந்ததும் பேரனுக்கு உடனடியாக இதில் பங்கு கிடைக்காது. ஒருவேளை பேரனின் தாத்தா, தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சொத்துக்கள் ஏதாவது வாங்கியிருந்தால், அந்த சொத்துக்களை அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதற்கு பேரனால் எந்த எதிர்ப்பும் காட்ட முடியாது.

ஒருவேளை அந்த நபர் உயில் எதுவும் எழுதாமல் இறந்துவிட்டால், அப்போதுதான் அவரது உடனடி சட்ட வாரிசுகளான மனைவி, மகள், மகன் ஆகியோர் அவரது சுய சம்பாத்திய சொத்துகளுக்கு உரிமை கோர முடியும். இதில் பேரனுக்கு எந்தப் பங்கும் கிடைக்காது. இறந்தவரின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு கிடைத்த சொத்துக்கள் அனைத்தும் தனிநபர் சொத்துகளாகவே கருதப்படும். இந்த சொத்தில் எனக்கு பங்குள்ளது என யாரும் உரிமை கோர முடியாது. ஒருவேளை தாத்தாவின் ஏதாவதொரு மகனோ அல்லது மகளோ, அவர் இறப்பதற்கு முன் இறந்துவிட்டால், மூத்த மகன் அல்லது மகளுக்கு எவ்வுளவு பங்கு கிடைத்ததோ அதேயளவு பங்கு இறந்தவரின் சட்ட வாரிசுகளான மகனுக்கோ அல்லது மகளுக்கோ கொடுக்கப்பட வேண்டும்.

ஆகவே, ஒருவருடைய தாத்தா இறந்துவிட்டால், அந்த தாத்தாவின் சொத்து முதலில் பேரனின் தகப்பனாருக்கே செல்லும்; பேரனுக்கு அல்ல. அதன்பிறகே தகப்பனிரிடமிருந்து மகனுக்கு கிடைக்கும். ஒருவேளை தாத்தா இறப்பதற்கு முன்பே அந்த நபரின் தந்தை இறந்துவிட்டால், அப்போதுதான் தாத்தாவின் சொத்து பேரனுக்கு நேரடியாக கிடைக்கும்.

பேரன் பிறக்கும் போதே மூதாதையர்களின் சொத்திற்கு உரிமையாளனாகிறான். இது தொடர்பாக ஏதாவது பிரச்சனை இருந்தால், அவர் தாராளமாக சிவில் நீதிமன்றம் செல்லலாம். மூதாதையர்களின் சொத்தில் இவருடைய தந்தைக்கும் தாத்தாவிற்கும் எவ்வுளவு உரிமை உள்ளதோ அதே உரிமை இவருக்கும் (பேரன்) இருக்கிறது.

ஆனால் ஒன்றை மறந்துவிடக் கூடாது. தாத்தா இறந்துவிட்டால், அவருடைய மூதாதையர் சொத்து நேரடியாக தந்தைக்கு செல்லுமே தவிர பேரனுக்கு அல்ல. ஒருவேளை மூதாதையர் சொத்தில் தனது பங்கை தந்தை தர மறுத்தால், அவர் (பேரன்) தாராளமாக நீதிமன்றம் செல்லலாம்.

Previous Next

نموذج الاتصال