சென்னையில் இப்படி ஒரு கோவிலா? வீடு வாங்கும் கனவு இருந்தால் இந்த கோவிலுக்கு அமாவாசையில் செல்லுங்கள்.


எல்லாருக்கும் இருக்கும் ஆசைகளில் வீடு வாங்குவது என்பது பெரிய கனவாக இருக்கும். ஏன்! ஒரு சிலருக்கு லட்சியமாக கூட இருக்கும். எப்படியாவது ஒரு வீடு நமக்கென்று அமைந்து விடாதா? என்று ஏங்கி காத்து கொண்டிருப்போர் பட்டியலில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். வீடு வாங்குவதற்கான திட்டம் தீட்டி விட்டீர்கள். ஆனால் அதில் பல தடைகள் வந்து கொண்டு இருக்கும். வங்கிகளில் கடன் கிடைக்காமல் இருக்கும், வரவேண்டிய பணம் தாமதமாகும், குடும்பத்தில் சில பிரச்சனைகளால் கட்ட முடியாமல் பாதியில் நிற்கும். இப்படி ஏதாவது சிக்கல் வந்து கொண்டே இருக்கும். உங்கள் கனவு இல்லம் நினைவாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று இதை செய்துவிட்டு வாருங்கள். என்ன செய்ய வேண்டும்? என்று இப்பதிவில் மேற்கொண்டு காணலாம் வாருங்கள்.

வழித்தடம்: சென்னையில் உள்ள மிருக காட்சி சாலை அமைந்திருக்கும் வண்டலூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் புதுப்பாக்கம் என்ற ஊர் அமைந்துள்ளது. சென்னையில் இப்படி ஒரு புகழ் வாய்ந்த கோவில் இருப்பது பெரும்பாலானோர்க்கு வியப்பாக தான் இருக்கும்.

தல வரலாறு: ராமாயணத்தில் லக்ஷ்மணனை காக்கும் பொருட்டு சஞ்ஜீவி மூலிகையை தேடி அலைந்த ஆஞ்சநேயருக்கு மூலிகையை கண்டுபிடிக்க முடியாமல் அம்மலையையே பெயர்த்து கொண்டு பறந்து வந்த கதை நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வாறு பறந்து வந்து கொண்டிருந்த போது மாலை வேளை வந்து விட்டது. சந்தியா வந்தனம் செய்வதற்காக கஜகிரி மலை மீது இறங்கியதாக தல வரலாறு கூறுகிறது. அனுமரின் பாதம் பட்ட காரணத்தினால் வியாச ராஜ தீர்த்தன் என்ற சக்ரவர்த்தி அங்கு அனுமாரின் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார். அதன் பின் திருமங்கை ஆழ்வார் கோவில் எழுப்பி, பல்லவர்கள் பலரால் திருப்பணிகள் நடைபெற்றதாக குறிப்புகள் உள்ளது.

கோவில் சிறப்புகள்: 108 திவ்ய தேசங்களில் திருவிடந்தையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவிலும் ஒன்று. அக்கோவிலின் ‘பரிவேட்டை’ தலமாக விளங்குகிறது புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில். இங்கு வரும் பக்தர்களுக்கு வலம்புரி சங்கு கொண்டு புனித தீர்த்தம் வழங்கப்படுகிறது. வேறு எந்த அனுமார் கோவிலும் இந்த வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பாக்கத்தில் அமைந்துள்ள கஜகிரி என்னும் மலையில் வீற்றிருக்கும் அனுமார் சாலகிராம கல்லால் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மூலவர் வடக்கு நோக்கி 6 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இக்கோவிலில் 108 படிக்கட்டுகள் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது.

இம்மலையில் இன்றும் ஆஞ்சநேயர் பௌர்ணமி தோறும் இரவில் கிரிவலம் வந்து கொண்டிருப்பதாக அங்கிருக்கும் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. ஆகவே இம்மலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றால் நினைத்தது அப்படியே நடக்கும் என்று கூறப்படுகிறது.

கோவில் பரிகாரங்கள்: 

1. அமாவாசையில் புது செங்கல் ஒன்றை வாங்கி அதில் பகவான் ஸ்ரீ ராமரின் நாமத்தை எழுதி தலையில் வைத்து கொண்டு 108 படிகள் ஏறி கிரிவலம் வந்தால் கட்டாயம் வீடு வாங்கும் பாக்கியம் சீக்கிரம் கிடைக்க பெறும் என்பது ஐதீகம்.

2. அருகம்புல் மற்றும் வெற்றிலை மாலை சூட்டி, வெண்ணை சாற்றி தரிசனம் செய்தால் நினைத்த வேலை நினைத்தபடி அமையும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் எந்த பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும்.

3. பிரதி மாதம் மூல நட்சத்திரம் வரும் நாளில் வெற்றிலை மற்றும் வடை மாலை சாற்றி தரிசனம் செய்து வழிபட்டு வந்தால் காரியத்தடை, திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோவில் பிரகாரத்தில் இராமாயணம் சார்ந்த காட்சிகள் சுற்றிலும் செதுக்கபட்டுள்ளது காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கின்றன. அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு புராண தலம். சென்று வழிபட்டு பயனடையுங்கள்.

Previous Next

نموذج الاتصال