சொத்து என்பது நிலம் வீடு மட்டும் குறிக்கும் அர்த்தமல்ல. வாகனம் வாங்க வேண்டும் அல்லது நகைகள் வாங்க வேண்டும் அல்லது வீட்டிற்கு தேவையான மற்ற பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். விரும்பியதை வாங்கக்கூடிய யோகத்தை தரக்கூடிய பரிகாரம் தான் இது.
அரச இலை. இந்த அரச இலைக்கு எப்போதுமே ஒரு தனி மகத்துவம் உண்டு. அரச வாழ்க்கையை, யோகத்தோடு வாழவேண்டும் என்றால் அரச இலையை கையோடு வைத்துக்கொள்ள வேண்டும். இதேபோல் நமக்கு நல்ல நேரம் பிறக்க வேண்டும் என்றால் ராகு காலத்தில் இறை வழிபாடு செய்வது மிக மிக நல்லது. இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்து நாம் ஒரு பரிகாரமாக செய்யப் போகின்றோம்.
எப்போதும்போல பூஜையறையை சுத்தம் செய்துகொள்ளுங்கள். சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, தீபம் ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறையின் முன்பு ஒரு அரச இலையை வைத்து அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து, சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். துர்க்கை அம்மனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். குறிப்பாக இந்த தீபத்தை தினந்தோறும் வரக்கூடிய ‘ராகு கால’ நேரத்தில் ஏற்ற வேண்டும் என்பதில் தான் சூட்சுமமே அடங்கியுள்ளது.
ராகு கால நேரத்தில் மேல் சொன்ன முறைப்படி அரச இலையில் வீட்டில் தீபம் ஏற்றி நம்பிக்கையோடு வழிபாடு செய்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய துரதிர்ஷ்டம் காலம் கூட, அதிர்ஷ்டமாக மாறிவிடும். சில பேருக்கு என்ன தான் பரிகாரங்கள் செய்தும் நல்லது நடக்காது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டமே இல்லாதவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்தால் கூடிய விரைவில் நல்ல பலனை பெற முடியும்.
இந்த தீபத்தை இத்தனை நாட்கள்தான் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுடைய குறிக்கோளை அடையும் வரை, இலக்கு எவ்வளவு பெரியதோ அது நிறைவேறும் வரை, அத்தனை நாட்கள் தொடர்ந்து நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி வாருங்கள். (பெண்களுக்கு இடையிடையே மாதவிடாய் நாட்கள் வரும் போது அந்த நாட்களைத் தவிர்த்து விட்டு மற்ற நாட்களில் தீபம் ஏற்றலாம்.) நிச்சயமாக நல்ல காலம் பிறக்கும். அரச இலை காய்ந்த பின்பு புதியதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையுள்ளவர்கள் பரிகார தீபத்தை ஏற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.